முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தன்மதாவள கல்வெட்டு



சேலம் வரலாற்று ஆய்வுமைய தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான வெங்கடேசன், ஆறகளூரில் ஆய்வு மேற்கொண்டார். கோட்டைக்கரை என்ற இடத்துக்கு அருகே, ராமன் என்பவரின் விளைநிலத்தின் வரப்பின் மீது, ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. இவை, 13ம் நூற்றாண்டு கல்வெட்டு என தெரியவந்தது.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: இந்த கல்வெட்டில் மொத்தம், 16 வரிகள் உள்ளன. 'ஸ்வஸ்திஸ்ரீ களப்பாளராயனும் புரவாரியாருக்கு' என, கல்வெட்டு துவங்குகிறது. களப்பாளராயர் என்பவர் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன், நிலங்களை நிர்வகிக்கும் முக்கிய அதிகாரியாக இருந்தார். இவரது உத்தரவுப்படி, கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. புரவாரியார் என்பவர் வரிக்கணக்கை சரி பார்க்கும் அலுவலர் ஆவார். களப்பாளராயரின் ஆணையை புரவாரியார் நிறைவேற்றி உள்ளார். ஆறகளூரில் வாழ்ந்த வணிகர்கள், அரசுக்கு செலுத்த வேண்டியை வரியை செலுத்த தேவையில்லை எனவும், அந்தப்பணத்தை, 'உலகம் காத்த சோளீசுரமுடைய நாயனார்' கோவிலுக்கு ஒன்பதாவது தை மாதம் முதல் பூஜை, திருப்பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்று, கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டின் கடைசியில், 'தன்ம தாவளம்' என்ற சொல், மிகப்பெரிய வணிக நகரை குறிக்கிறது. 12ம் நூற்றாண்டில் மகதைப்பெருவழி என்ற வணிகவழிப்பாதை ஒன்று இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக, ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் ஒரு மைல் கல் இருந்தது. அதில் 'ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் பெருவழி காஞ்சிபுரம்' என்று குறிப்பிடப்பட்டு, கீழ் பகுதியில் ஒரே அளவிலான, 16 குழிகள் உள்ளன. இவை, ஆறகளூர் - காஞ்சிபுரம் இடையேயான தூரத்தை குறிக்கிறது. இந்த மைல்கல், சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது.

கருத்துகள்

  1. தன்ம தாவளம் என்ற சொல்லை வணிக நகரம் என்று கொள்ளுதலாகாது. தன்ம தாவளர் என்ற முன்னொட்டுக் கொண்ட பலரைக் கல்வெட்டுக்களில் காண்கிறோம். முழு வாசகத்தையும் தந்தால் அது பற்றிய புரிதல் சிறக்கும்.

    பதிலளிநீக்கு
  2. தாவளம் என்பது வணிக ஊரை குறிக்கும் என கல்வெட்டியல் பேராசிரியர் இராசகோபால் அய்யா கூறியுள்ளார் அய்யா

    பதிலளிநீக்கு
  3. ஆவணம் 2016ல் இதன் கல்வெட்டு வாசகம் உள்ளது அய்யா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக